தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு அரசு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர்கள்
நலவாரியம் அமைக்கப்படும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கான நிதியுதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும், பத்திரிகையாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் திட்டம், இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி பயில அரசு நிதி உதவி வழங்கும் என்பது போன்ற அறிவிப்புகளை கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வரவேற்கிறது.
குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தற்போதைய அரசு நிறைவேற்றியிருப்பதற்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம் இந்த நலவாரியம், தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளை மட்டும் கொண்டு ஏற்படுத்தப்படாமல் காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றப்பட வேண்டும்.
குறிப்பாக, காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் முறையை மாற்றி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட, தாலுகா செய்தியாளர்கள் பலன் பெறும் வகையில், ஒருங்கிணைந்த அமைப்பாக நலவாரியத்தை உருவாக்க வேண்டும். அரசின் பலன்கள் மிகச் சிலருக்கு மட்டும் சென்று சேரும்படியாக இருப்பதை பரவலாக்கி, தகுதியுடைய அனைத்து பத்திரிகையாளர்களும் பலனளிக்கும் வகையில் வாரியம் அமைக்கப்பட்டு அது சிறப்புற செயல்பட அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பணியின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கான நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேநேரம், இந்த அறிவிப்பும் அனைத்துத் தரப்பு உழைக்கும் பத்திரிகையாளர்களையும் சென்றடையும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும் என மன்றம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது. திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் திட்டம், இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி பயில அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் ஆகியவை தற்காலச்சூழலுக்கு ஏற்றத் தொலைநோக்கு திட்டங்கள் என்பதால் மன்றம் இதனை மனதார வரவேற்கிறது.
தமிழகம் முழுவதும் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் மன்றங்களின் ஆலோசனையைக் கேட்டுப்பெற்று, இந்தத் திட்டங்களைச் சீரிய முறையில், அனைத்து இளம் பத்திரிகையாளர்களுக்கும் பலனளிக்கும் ஒன்றாக மாற்ற அரசு ஆவண செய்ய வேண்டும்.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றும் இதழியலாளர் ஒருவருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்கிறோம். இந்த விருதுக்கான தேர்வு அம்சங்களையும் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசின் புதிய அறிவிப்புகள் வரவேற்பிற்குரியதாக இருந்தாலும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகையாளர் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்றம் மீண்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளது. அதே போல், தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கான மானிய விலை வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் உள்ள பல்வேறு குளறுபடிகளையும், சிக்கலையும் நீக்கி, அது முழுமையாக பத்திரிகையாளர்களுக்குப் பலனளிக்கும் திட்டமாக மாற்றப்பட வேண்டும் எனவும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.